பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயம்
கந்தளாய்
இப்பாடசாலை 1938ம் ஆண்டு கந்தளாய்ப் புகையிரதக் கடவைக்கருகில் முதன்முதலில் அமைக்கப்பட்டது. அவ்வேளை பேராற்றுவெளியிலிருந்து மாணவர்கள் பகையிரதப் பாதையால் வந்து கல்வி கற்றனர். முதல். R.அரசரத்தினம் என்பவர் இப்பாடசாலையின் முதலாவது அதிபராகவும், கதிர்காமத்தம்பி காசினாதன் என்பவர் முதல் மாணவராகவும் பதிவு செய்யபப்ட்டார். இவற்றைப் பழைய மாணவர்களான லெத்தீபு, சவுக்தீன், றெசாக் என்பவர்களிடமிருந்து அறிந்து கொண்டேன். பின் மாணவர்களின் கஷ்ட நிலையை உணர்ந்து, காலஞ்சென்ற உதுமான் ஷா என்பவரின் தலைமையில் பெற்றோர்கள் ஒன்று கூடி 1944ம் ஆண்டு 20’ ஓ 40’ அளவில் ஒரு கட்டிடத்தை அமைத்து மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சேவையினை வழங்கினர். இதே ஆண்டில் திரு. கதிரித்தம்பி என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவருடைய காலத்தை “வசந்த காலம்” எனக்கூறலாம். ஏனெனில் இவர் வீடுவீடாக சென்று மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து பாடசாலைக்கு அழைத்து வருவார். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் பெரும் மதிப்பையும் மரியாதையையும் வைத்து இன்றும் இவரை வினைவு கூறுகின்றனர். 1948ம் ஆண்டளவில் இவர் இடமாற்றம் பெற்றுச் செல்ல மட்டு நகரைச்சேர்ந்த திரு.அரசரத்தினம் என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்று பாடசாலையை வழிநடாத்திச் சென்றார்.
1950ம் ஆண்டளவில் அவர் இடமாற்றம் பெற்றுச் செல்ல அவரின் இடத்திற்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜனாப். ஐயூப் என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவ்வாசிரியர் கற்பித்தலில் மிக ஆர்வம் காட்டியதுடன் 1952ம் ஆண்டு நடைபெற இருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தோற்றச்செய்ய அரும்பாடுபட்டு அதற்காக அவ்வகுப்பில் திறமைகாட்டிய மஜீது ஆமினா உம்மா எனும் மாணவியை தெரிவ செய்து அம்மாணவியை பரீட்சையில் சித்திபெறுவதற்கு தனிப்பட்ட முறையில் கற்பித்து ஆர்வம் காட்டினார். அதன்பயனாக அம்மாணவி அவ்வாண்டு நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்து திருகோணமலை மாவட்டத்தில் முதன் முதலில் சித்தியடைந்த முஸ்லிம் மாணவி என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார். பின் அம்மாணவியை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். பின் சிறிது காலம் செல்ல அவர் தனது சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். இதன் பின்னர் மூதூரைச் சேர்ந்த சாஹ_ல் ஹமீது என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் கம்பளை ஆண்டியா கடவத்தை முஸ்லீம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் கிடைத்தவுடன்;, 1957.05.06ம் திகதியன்று முதல் நியமனம் பெற்று VM. சாலிஹ_ என்பவரிடம் பாடசாலை பொறுப்பைவிட்டுச் சென்றார்.
இவ்வேளை இங்கு A.ஆதம் பாவா மௌலவி, A. ஜினதாஸ ஆகிய இருவருமே கடமை புரிந்தனர். மாணவர்களின் தொகையோ 140 வகுப்பு தரம் ஏழு வரை இருந்தது. இவ்வாறாக இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில், காத்தான்குடியைச் சேர்ந்த MMM நூர் முகம்மது என்பவர் நிரந்தர அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் சிறிது காலம் கடமை புரிந்து கொண்டிருந்த வேளையில் சம்மாந்துறையைச் சேர்ந்த . சுலைமான் லெப்பை என்பவர் கடமையேற்றுக்கொண்டார். தூரம், கஷ்டம் என்பவற்றைக் காரணம் காட்டி அவரும் அடமாற்றம் பெற்றுச் செல்ல, உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய என்னிடம் பாடசாலையின் பொறுப்புக்கள் வந்தடைந்தன. மீண்டும் நானே கடமையை ஏற்று நடாத்திக் கொண்டிருக்கும் வேளையில் 1952ம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த A. ஆமினா உம்மா என்பவர் 1959.04.16ம் திகதி ஆசிரியர் நியமனம் பெற்று, மூதூர் தொகுதியில் நியமனம் பெற்ற முதலாவது முஸ்லிம் பெண் ஆசிரியை என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, 1959ம் ஆண்டு பிற்பகுதியில் காத்தான்குடியைச் சேர்ந்த AMA காதர் என்பவர் அதிபராகக் கடமையேயற்றார். இவர் வந்தவுடன் கடும் சுறுசுறுப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல் உடனடியாக பெற்றார், ஆசிரியர் சங்கத்தைக் கூட்டி என்னை செயலாளராக நியமித்தார். பின் பாடசாலைக்கு இடவசதி போதாது என்று உணர்ந்து பக்கத்திலிருந்த சக்கரிய்யா என்பவரது தரிசு நிலத்தை பாடசாலைக்கு சொந்தமாக்க முயன்றார். இதற்காக செயலாளருடன் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் MEH. முஹம்மது அலி என்பவரை சந்தித்துள்ளார். இவரது சொந்த முயற்சியால், தனது சொந்த மச்சானின் காணி என்று பாராது காணியை ஒதுக்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல் 20’x80’ கட்டடத்திற்கு நிதியும் ஒதுக்கிக் கொடுத்தார். இக்காணி கேணி போலிருந்ததால் அதை செப்பனிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறு சிறிது காலம் செல்ல இடமாற்றம் பெற, சம்மாந்துறையைச் சேர்ந்த யு.ட. இப்ராலெப்பை என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஆசிரியர்களிடம் நன்றாக வேலை வாங்குவார். மக்களின் சூழல், அரசியல் சூழல் ஆகியவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல வேலைகளைச் செய்தார்.
• பாடசாலை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டமை
• 20’X80’ அளவில் பாடசாலைக் கட்டடம் அமைக்கப்பட்டமை
• மலசல கூட வசதி ஏற்படுத்தியமை
• பாடசாலைக்கு பெயர்ப் பலகை அமைத்தமை
• பு.ஊ.நு.(சாஃத) வகுப்பு நடாத்த அனுமதி பெற்றமை
அத்துடன் 1965ம் ஆண்டு முதலாக இப்பாடசாலையிலிருந்து ஐந்து மாணவிகள் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியதில் ஆ.மர்ஜானி எனும் மாணவி மட்டும் சித்தியடைய, ஏனைய பெற்றோர்களின் மனதில், தங்களது பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இத்தகைய உயர்ச்சிக்கு வித்திட்டவர் காலம் சென்ற இப்றாகீம் தலைவராவார். இவர் அதிபரை அடிக்கடி அழைத்துக் கொண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ALA மஜீது அவர்களைச் சந்தித்து மேற்படி வேலைகளை முடித்துக் கொடுத்தது மட்டுமல்லாமல் அதிபரது பதவியையும் முதலாம் தரத்திற்கு தரமுயர்த்திக் கொடுத்தார். இவருடைய காலத்தில் பாடசாலையில் அதிக ஆசிரியர்கள் கற்பித்தனர். இவ்வாறு இவரது சேவையை அவர் தொடர்ந்த வேளையில், தனது சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். இதன் பிறகு சாய்ந்தமருதைச் சேர்ந்த அ. அ. மன்சூர் என்பவர் அதிபராக பொறுப்பேற்றார்.
அமைதியான சுபாவமுள்ள இவருடைய காலத்தில் தான் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக ஏழாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது. 1969ம் ஆண்டு நடைபெற்ற பரீட்சையில் இப்பாடசாலை சார்பாக M. ஜுனைது எனும் மாணவன் சித்தியடைந்தார். இம்மாணவனை நானே அழைத்துக் கொண்டு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தி;ல் தனது கல்வியைத் தொடர சேர்த்தேன். இதே ஆண்டில் தான் குதரத்தலி என்னும் மாணவன் விளையாட்டுத் துறையில் புலமைப் பரிசில் பெற்றும், அம்மாணவனது தந்தையால் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தால் அச்சந்தர்ப்பம் தவறியது.
இவ்வாறே பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவருக்கும் சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைத்தது. அவர் செல்ல மீண்டும் சம்மாந்துரையைச் சேர்ந்த இபுனுலெப்பை இங்கு கடமையேற்க வந்தார். முதல் கடமை புரிந்த அதிபரின் கடமைகளை முன்னெடுத்துச் சென்றார். இவரும் இடமாற்றம் பெற்றதும், பொறுப்புக்கள் எனது கைக்கு வந்தது. சகல ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பல மாதங்கள் பாடசாலையை வழிநடாத்திச் சென்று கொண்டிருந்த வேளையில் கிண்ணியாவைச் சேர்ந்த ஜனாப். N.M. ஜெமீல் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் பாடசாலையின் உயர்ச்சிக்காக பாடுபட்ட இவரின் சுறுசுறுப்புக் குன்றி விட “காதி” நீதிபதி சேவையில் தனது முயற்சியை திருப்பி அதில் வெற்றிகண்டார். இவரது சேவையத் தொடர்ந்து, கிண்ணியாவைச் சேர்ந்த SM.ஹனீபா என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். இவருடை கால கட்டத்தில் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டினர். இவர் நோய்வாய்ப்பட பாடசாலைக்கு அதிபராக
PMMA கபூர் என்பவர் கடமையேற்றார்.
இவரது சேவையைத் தொடர்ந்து VM சாலிகு ஆகிய நான் பாடசாலை அதிபராக கடமையேற்றுக் கொண்டேன். இக்காலகட்டத்தில் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பெற்றோர்கள் பாராட்டத்தக்க விதத்தில் 1982ம் ஆண்டு இல்லவிளையாட்டுப் போட்டி ஒன்றினை நடாத்தினேன். இவ்விளையாட்டுப் போட்டியை சேருவிலை பாராளுமன்ற உறுப்பினர் திரு. லீலாரத்தின மற்றும் மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் திரு. தங்கத்துரை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
1982ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியோரில், முப்பது வருடங்களுக்குப் பின் பிரோஸ், றிஹானா சாலிகு ஆகிய மாணவர்கள் சித்தியடைந்தனர். இதேநேரம் இங்கு கடமைபுரிந்த ஆசிரியர்களில் அதிகமானோர் உறவினர்களாக இருந்தமையாலும் என்னிடம் கல்வி கற்றவர்களாக இருந்தமையாலும் என்னால் பாடசாலையை திறம்பட வழிநடாத்திச் செல்ல முடியாது என்ற அச்சத்தினால், பிரிதொரு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றேன். இதன் பிறகு PMMA கபூர் ஆசிரியரிடம் பாடசாலைப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. இவர் ஒரு கண்டிப்பான அதிபராக கடமைபுரிந்ததால் மாணவர்கள் நன்றாக கல்விகற்று அனேகமானோர் பொதுப் பரீட்சைகளில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெறுமை தேடிக் கொடுத்தனர். இவரது கால கட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இவரும் இடமாற்றம் பெற்றுச் செல்ல MM முஸ்தபா என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார்.
இவர் ஓர் சுறுசுறுப்பான அதிபராக விளங்கினார். இவருடைய காலத்தில் இல்ல விளையாட்டுப் போட்டிகளெல்லாம் வைத்து, பலரது பாராட்டையும் பெற்றார். அத்துடன் ஓடவேண்டிய இடமெல்லாம் ஓடி, இவ்வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு தொடங்குவதற்கு வழிசமைத்துக் கொடுத்தார். முதன் முதலாக நடைபெற்ற பரீட்சையில் பாஜித், ஜில்ஸாத் ஆகிய மாணவர்கள் சித்தியடைந்து இப்பாடசாலைக்கு பெறுமை தேடிக்கொடுத்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பெரிதும் சந்தோசப்பட்டார். பெற்றோரும் அவரைப் போற்றிப் பாராட்டினர். சிறிது காலம் சேவையாற்றிய பின் இவர் இடமாற்றம் பெற்றுச் செல்ல புல்மோட்டையைச் சேர்ந்த அஸீஸ் என்பவர் அதிபராகக் கடமையேற்றார்.
இவர் இங்கு கடமையேற்க வந்ததும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைக் கூட்டி பாடசாலை முன்னேற்றம் சம்மந்தமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு பல பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்தார். இவரது காலத்தில் மாணவர்களும் அயராது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்களது முயற்சியின் காரணமாக அனேகமான மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தனர். இவரும் இடமாற்றம் பெற்றுச் செல்ல முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த சுபைர் அதிபரும், அவரது சேவைக்குப் பிறகு ஆ. ஜுனைது என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். இவ்வதிபர்கள் இருவரும் பெற்றோர்களின் பல எதிர்ப்புக்களின் மத்தியிலும் தம்து கடமைகளை சிறப்பாக செய்தனர்.
இவர்களின் சேவையைத் தெர்ர்ந்து இப்பாடசாலையின் பழைய மாணவரும், இக்கிராம வாசியுமான முஸ்தபா சஹாப்தீன் அவர்கள் அதிபராகக் கடமையேற்று, அனைவர்களதும் எதிர்பார்ப்புக்களுக்கேற்றாற் போல் மிகச்சிறப்பாக பாடசலையை வழிநடாத்தி இக்கிராம மக்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.
அன்மைக் காலங்களில் அன்னாரின் வழிகாட்டலில் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என்பவற்றில் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதனால் மக்களது ஆதரவும் கல்வி அதிகாரிகளின் பாராட்டுக்களும் இவரை வந்தடைந்தது. மேலும் இவரது வழிகாட்டலில் தமிழ்த் தினப் போட்டிகள், மீலாதுன் நபி விழா போன்ற போட்டிகளிலும் மாணவர்கள் தங்களுடைய திறமைகளைக் காட்டி தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வியை புத்தகக் கல்வியோடு மட்டும் நிறுத்திவிடாது, களப் பயணங்கள், கல்விச் சுற்றுலாக்கள் என்பவற்றிற்கு அழைத்துச் சென்று மேலும் அவர்களது அறிவை வலுவடையச் செய்தார்.